பதிவு செய்த நாள்
09
நவ
2024
08:11
திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி குமரவிடங்கபெருமான் தெய்வானை அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2ம் தேதி கந்தசஷ்டி திருவிழா துவங்கியது. இத்திருவிழாவின் 7ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை , உதய மார்த்தாண்ட அபிஷேகம் அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு புறப்பட்டு தெப்பக்குளம் முருக மடத்தில் எழுந்தருளினார். மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலிலிருந்து எழுந்தருளி, முருகமணடபத்திற்கு வந்தார். அங்கு தெய்வானை அம்மனுக்கு நேற்றுமாலை காட்சி கொடுத்த பின் தீபாராதனை நடந்தது. தெற்கு ரத வீதி சந்திப்பில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்மன் நேர் எதிரெ எதிரெ நிற்க தோள் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்மன் 3முறை சுற்றி வந்தார். பின்னர் சுவாமி, அம்மனுக்கு தோள் மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள் மாற்றப்பட்டன. தொடர்ந்து சுவாமிக்கு, அம்மனுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக உலா வந்து கோவிலை சேர்ந்தார். பின்னர் இரவு ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் – தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தில் பக்தர்கள் மொய் எழுதி வழிப்பட்டனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கி பிரசாதம் வழங்கப்பட்டது.