பதிவு செய்த நாள்
20
நவ
2024
01:11
சின்னமனூர்; சின்னமனூரில் உள்ள பிரசித்தி பெற்ற லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் 19 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுவதை ஒட்டி இன்று காலை கோயிலில் பாலாலயம் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பழமையும், சிறப்பும் பெற்ற பெருமாள் கோயில்களில் முதலிடம் பெறுவது சின்னமனூர் லெட்கமி நாராயணப் பெருமாள் கோயில். பெருமாள் திருப்பதியில் கையை கீழ் நோக்கியும், காஞ்சியில் ஆசி வழங்குவது போன்றும் இருப்பார்கள். ஆனால் இங்கு கன்னிகாதானம் பண்ணுவது போன்ற தானகஸ்த கோலத்தில் நின்றுள்ளார். சுமார் 9 அடி உயரமுள்ள நின்ற கோலத்தில் அருளும் பெருமாள் வேறு எங்கும் இல்லை. பெருமாளின் காலடியில் ஆஞ்சநேயர் இருப்பது தனி சிறப்பம்சமாகும். நீண்ட காலத்திற்கு முன் இங்குள்ள ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி கட்டி, அவரை பிரதிஷ்டை செய்ய உத்தேசித்திருந்த நாளில், 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கோவிலிற்கு வந்து, இங்குள்ள பாக்கு மரத்தில் ஏறி ஆவேசத்துடன் கூச்சலிட்டார். அவரை சமாதானம் செய்து கேட்டபோது, நான் பெருமாளின் காலடியில் இருக்க ஆசைப்படுகிறேன், என்னை இடமாற்றம் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார். எனவே ஆஞ்சநேயரை, பெருமாள் காலடியில் வைக்கப்பட்டார். நோய்வாய்பட்டவர்கள் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யும் போது அவரது இடுப்பில் துண்டை கட்டி, அபிஷேகம் முடிந்தபின் அந்த ஈரத் துண்டை நோய்வாய் பட்ட வரின் உடம்பில் போர்த்தினால் நோய் குணமாகும். திருமண தடையும் நீங்கும் என்று அர்ச்சகர்கள் கூறுகின்றனர்.
இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 2005 ல் நடைபெற்றது. ஒவ்வொரு 12 ஆண்டிற்கும் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால் இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து 19 ஆண்டுகளாகி விட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஹிந்து சமய அறநிலைய துறை தற்போது திருப்பணி செய்ய முன் வந்துள்ளது. இன்று காலை கோயில் வளாகத்தில் அதற்கான பாலாலயம் நடைபெற்றது. அதிகாலை முதல் மூலவருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்று திருக்கோயில் விமானத்திற்கு மட்டும் பாலாலய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பாலாலய பூஜைகளில் சிவகாமியம்மன் கோயிலில் திருப்பணி செய்து வரும் துர்கா நிறுவனங்களின் சேர்மன் வஜ்ரவேல், காயத்ரி பெண்கள் மெட்ரிக் பள்ளி தாளாளர் விரியன் சாமி, கார்த்திக், குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நதியா செய்திருந்தார்.