பதிவு செய்த நாள்
20
நவ
2024
02:11
மயிலாடுதுறை; தேரழந்தூர் மும்மூர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமையான மும்மூர்த்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. எங்கும் இல்லாத படி கோவிலில் ஒரே சன்னதியில் 3 விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். பிரம்மா, விஷ்ணு, சிவபெருமானாக காட்சி அளிக்கும் இந்த மூன்று விநாயகரை தரிசித்தால் தோஷம் மட்டுமன்றி சாப விமோசனங்கள் கிட்டும் என்பது ஐதீகம். மேலும் திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தை பாக்கியம் மற்றும் காரிய நிவர்த்தி ஸ்தலம் ஆகவும் திகழ்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் தாங்கள் எந்த சுப காரியங்கள் செய்தாலும் அதற்கு முன்பாக இக்கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, இன்று காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் தனுர் லக்னத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17ம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 18ம் தேதி முதல் காலை யாகசாலை பூஜைகளும் தொடங்கியது இன்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. 9 மணிக்கு யாகசாலைகளில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான கிராம மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகளை கோவில் அர்ச்சகர் ராஜ மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்திருந்தனர்.