பதிவு செய்த நாள்
26
நவ
2024
11:11
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீஐயப்ப சுவாமி உற்சவருக்கு நேற்று, பவானி கூடுதுறையில், ஆராட்டு உற்சவமும், அஷ்டாபிஷேக பூஜையும், மேள தாளத்துடன் விமரிசையாக நடந்தது.
திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில், 65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, சபரிமலை ஐயப்பன் கோவில் வழிமுறைகளை பின்பற்றி, பூஜை முறைகள் நடந்து வருகின்றன. ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட் மற்றும் ஸ்ரீஐயப்ப பக்தஜன சங்கம் மூலமாக, கோவில் நிர்வகிக்கப்படுகிறது. மண்டல பூஜை கொடியேற்றத்தை தொடர்ந்து, நவகலச பூஜை, 108 சங்காபிஷேகம், பறையெடுப்பு, மகாவிஷ்ணு பூஜை, உற்சவ பலிபூஜை, பகவதி சேவை, தாயம்பகை மேளம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. காலை, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, பவானி கூடுதுறையில் ஆராட்டு உற்சவத்துக்கு புறப்பட்டனர். கூடுதுறையில், பச்சை பந்தலில், சுவாமியை பிரதிஷ்டை செய்து, நெய், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், பன்னீர், விபூதி அபிஷேகமும், ஆராட்டு உற்சவமும், அலங்கார பூஜையும் நடந்தது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து, மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் ரதம் ஏறிய ஐயப்ப சுவாமி, முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊர்வலத்தின் போது, மேள, தாளம், வாண வேடிக்கை, பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.