பதிவு செய்த நாள்
27
நவ
2024
03:11
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில், மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை நடூரில், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதராக கல்யாண சுப்பிரமணியர், காலபைரவர் உள்ளிட்ட சுவாமிகளின் சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம் விழா கடந்த, 25ம் தேதி மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமத்துடன் துவங்கியது. இன்று காலை வரை, நான்கு கால யாக வேள்வி பூஜைகள் நடந்தன. காலை திருப்பள்ளி எழுச்சியை அடுத்து, நான்காம் கால யாக வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு யாக சாலையில் இருந்து, தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். 9:30 மணிக்கு கோபுரங்களின் கலசங்களின் மீதும், பரிவார் தெய்வங்கள் மீதும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதை தொடர்ந்து அபிஷேகமும், அலங்கார பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னூர் குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில், பத்து சிவாச்சாரியார்கள், யாக வேள்வி பூஜைகளை செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.