பதிவு செய்த நாள்
27
நவ
2024
04:11
காஞ்சிபுரம்; கர்நாடக மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்ட காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அம்மாநிலத்தில் யாத்திரையை நிறைவு செய்து, நாளை முதல் ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள சங்கரமடத்தில் முகாமிட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியதாவது: ஆந்திர மாநிலம், திருப்பதி சங்கரமடத்தில் முகாமிட்டிருந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களின் அழைப்பை ஏற்று நவ., 16ம் தேதியில் இருந்து, கர்நாடக மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டார். இதில், உடுப்பி, ராமச்சந்திரா மடம், ஹாசன் முதலிய இடங்களுக்கு விஜயம் செய்தார். யாத்திரை மேற்கொண்ட இடங்களில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, பல்வேறு அமைப்புகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகள், சுவாமிகள் பக்தர்களுக்கு அருளுரையாற்றி, ஆசி வழங்கினார். கர்நாடக மாநிலத்தில், விஜய யாத்திரையை நிறைவு செய்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இன்று திருப்பதிக்கு வந்தார். திருப்பதி சங்கரமடத்தில் முகாமிட்டுள்ள சுவாமிகள், வழக்கம் போல சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்வதுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.