பதிவு செய்த நாள்
28
நவ
2024
11:11
உடுமலை; உடுமலை திருமூர்த்தி மலை, பஞ்சலிங்கம் அருவி மற்றும் அமணலிங்கேஸ்னவரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்ததால், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதே போல், மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளி வரும், அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கனமழையால், தோணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அமணலிங்கேஸ்வரர் கோவில், கன்னிமார் கோவில், விநாயகர், முருகன் கோவில்கள் வரை வெள்ள நீர் ஓடி வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, நேற்று காலை முதல், பக்தர்கள், சுற்றுலா பயணியர் கோவில் வளாகத்திற்குள் வராதபடி, தடுப்பு அமைத்து, கோவில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, திருமூர்த்திமலை பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையிலும், கோவில் மற்றும் பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள், சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.