பதிவு செய்த நாள்
03
டிச
2024
11:12
பெங்களூரு ரூரல் மாவட்டம், நந்தி ஹில்ஸ் அடிவாரத்தில் உள்ள நந்தி டவுனில், போக நந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஒன்பதாம் நுாற்றாண்டில், கங்க வம்சத்தின் பானா ராணி ரத்னாவலி ஆட்சிக் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. அதன் பின், ஐந்து ராஜ வம்சத்தில் கோவில் பல முறை புனரமைக்கப்பட்டுள்ளது. பாலார், பினகினி, அர்காவதி, பாபக்னி, ஸ்வர்ணமுகி ஆகிய ஐந்து நதிகளின் ஆதாரமாக விளங்கும் இந்த மலை, உண்மையில் ஐந்து மலைகளாகும்.
வரலாறு; போக நந்தீஸ்வரர் கோவில் திராவிட கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணம். இந்த பகுதியை ஆட்சி செய்த கங்கா, சோழர்கள், ஹொய்சாலர்கள், பல்லவர்கள், விஜயநகர பேரரசு என ஐந்து வெவ்வே ராஜ வம்சங்களின் கட்டடக்கலையின் முத்திரையை காணலாம். இக்கோவிலில் சோழ மன்னர் ராஜேந்திரன் சிலையும் உள்ளது. சிவன் – பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட அசல்போக நந்தீஸ்வரர் கோவில், 9ம் நுாற்றாண்டில் கங்கா மன்னர்களால் கட்டப்பட்டாலும், 11ம் நுாற்றாண்டில் சோழ மன்னர்கள் கூரையையும்; ஹொய்சாலர்கள் திருமண மண்டபத்தையும்; 13ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசு வெளிப்புறச் சுவர் மற்றும் கட்டடங்களும் கட்டப்பட்டன. 1791 அக்டோபரில் ஆங்கிலேயர்கள் கோவிலைத் தாக்கினர்.
கட்டடக்கலை; சிவன் – பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில், கர்நாடகாவில் மிகவும் பழமையான கோவில். இங்கு, அருணாசலேஸ்வரர், உமா மகேஸ்வரர், போக நந்தீஸ்வரர் என மூன்று கோவில்கள் உள்ளன. போக நந்தீஸ்வரர் கோவில், சிவபெருமானின் இளமை பருவத்தை சித்தரிக்கிறது. இளமை என்பது வாழ்க்கையை மகிழ்வித்து மகிழ்வதற்கான என்பதற்காக, ஆண்டு முழுதும் இங்கு பல திருவிழாக்கள் நடக்கின்றன. உமா மகேஸ்வரர் கோவிலில், சிவனுக்கும் – பார்வதிக்கும் இடையிலான திருமணத்தை சித்திரிக்கிறது. புதிதாக திருமணமான தம்பதியர், சிவன் – பார்வதியின் ஆசிர்வாதத்தை பெற, இந்த கோவிலுக்கு அடிக்க வருகின்றனர். நந்தி மலையின் உச்சியில் அமைந்துள்ள யோக நரசிம்மர் கோவிலில், சிவன் துறந்த நிலையில் இருப்பதை குறிக்கும் வகையில், திருவிழாக்கள் எதுவும் இல்லை. இக்கோவிலிலும் அதை சுற்றிலும் குறிப்பிடத்தக்க சிற்பங்கள் உள்ளன. பிரதான நந்தீஸ்வரர் கோவிலில், கம்பீரமான சிவலிங்கம் உள்ளது. இக்கோவில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. துாண்களில் அழகிய வேலைப்பாடுகளை காண முடிகிறது. இந்த கோவிலில் ‘சிருங்கி தீர்த்த’க் குளம் அமைந்துள்ளது. நான்கு புறமும் படிக்கட்டுகள் உள்ளன. தெய்வீக காளையான நந்தி, கங்கையில் இருந்து தண்ணீரை கொண்டு வர, தனது கொம்பினால் தரையில் முட்டி எடுத்ததாகவும், இந்த குளம் தான் தென் பென்னை ஆற்றில் ஆதரம் என்று கூறப்படுகிறது. தினமும் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
எப்படி செல்வது?; பெங்களூரில் இருந்து ரயிலில் செல்பவர்கள், சிக்கபல்லாபூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், ஆட்டோவில் செல்லலாம். பஸ்சில் செல்பவர்கள், சிக்கபல்லாபூர் பஸ் நிலையத்தில் இறங்கிருந்து அங்கிருந்து ஆட்டோ, டாக்சியில் செல்லாம்.