பதிவு செய்த நாள்
06
டிச
2024
05:12
திருப்பதி: திருச்சானுாரில், பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள், பத்மசரோவரம் திருக்குளத்தில் புனித நீராடினர்.
திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, கடந்த வாரம் முதல், கார்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது. அதன் நிறைவு நாளான இன்று காலை பஞ்சமி தீர்த்தம் நடந்தது.பத்மாவதி தாயார், கார்த்திகை மாதம், சுக்லபட்சம் பஞ்சமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில், திருச்சானுாரில் உள்ள, பத்மசரோவரம் திருக்குளத்தில் அவதரித்தார். அதை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதம், சுக்லபட்சம் பஞ்சமி திதி அன்று முடிவு பெறும் விதம், பிரம்மோற்சவம் நடக்கிறது. அதன்படி, எட்டு நாட்களாக நடந்து வந்த பிரம்மோற்சவம், பஞ்சமி திதியுடன் நிறைவு பெற்றது.
சீர்வரிசை: திருச்சானுார் பத்மாவதி தாயார் அவதரித்த நாளான இன்று பஞ்சமி திதியன்று, தாயாருக்கு திருமலை ஏழுமலையான் மஞ்சள், குங்குமம், வளையல்கள், பட்டு வஸ்திரம், தங்க ஆபரணம், அதிரசம், வடை, லட்டு, அப்பம் உள்ளிட்ட சீர்வரிசையை அனுப்பினார். இதை, தேவஸ்தான அதிகாரிகள் தலையில் சுமந்தபடி, திருமலையிலிருந்து நடைபாதை மார்க்கமாக, திருப்பதியை அடைந்தனர். அங்கிருந்து, யானை மேல், கோவிந்தராஜஸ்வாமி கோவிலுக்கு சென்று மரியாதை பெற்றனர். பின், திருச்சானுார் மஞ்சள் மண்டபத்தை அடைந்தனர். அதை, திருச்சானுார் கோவில் அதிகாரிகள் பெற்று, திருக்குளத்தை அடைந்தனர்.சீர்வரிசை சென்ற பின், தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பல்வேறு அபிஷேக பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்தின் போது தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பல்வேறு வெட்டிவேர், திராட்சை, பட்டு நுாலிழைகளால் தயாரித்த மாலைகள், கிரீடங்கள் அணிவிக்கப்பட்டன.பின், சக்கரத்தாழ்வாருக்கு, திருக்குளத்தில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, திருக்குளத்தில் புனித நீராடினர்.