திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் அஷ்ட பைரவ யாகத்துடன் சம்பக சஷ்டி நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2024 07:12
திருப்புத்தூர்; திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு அஷ்ட பைரவ யாகத்துடன் 6 நாட்கள் நடந்த சம்பக சஷ்டி விழா xநிறைவடைந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் அமர்ந்த, யோகநிலையில் அருள்பாலிக்கிறார். யோகபைரவருக்கு ஆறுநாட்கள் சம்பக சஷ்டி விழா நடைபெறும். அசுரர்களின் மாயையால் இருள் சூழ்ந்த உலகை விடுவிக்க குமார ரூபமாக இருந்து அந்தகாசூரன், சம்பகாசூரன் ஆகியோரை பைரவர் வதம் செய்த நாளை குமார சஷ்டி என்றும், சம்பக சஷ்டி என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியன்று சம்பக சஷ்டி விழா துவங்கி 6 நாட்கள் நடைபெறும். டிச.1 ல் யோகபைரவர் சன்னதி முன்பாக உள்ள யாகசாலையில் அஷ்டபைரவ யாகம் நடந்து விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை,மாலை இரு காலங்களில் அஷ்ட பைரவயாகத்தை சிவாச்சார்யர்கள் நடத்தினர். 10 ம் கால யாகத்தில் ஆதீனகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பங்கேற்று தீபாராதனையை தரிசித்தார். நிறைவு நாளான நேற்று காலையில் யாகம் நடந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் மாலை 6:00 மணிக்கு 12 ம் கால யாகம் துவங்கியது. யாகம் நிறைவுக்கு பின் பூர்ணாகுதியைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் சிவாச்சார்யர்களால் பிரகாரம் வலம் வந்து மூலவர் யோகபைரவர் சன்னதிக்கு சேர்க்கையானது. பின்னர் தொடர்ந்து 16 வகையான திரவியங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கவசத்தில் சந்தனக் காப்பில் சுவாமி அருள்பாலிக்க, சிறப்பு பூஜைகள் நடந்து அலங்காரத் தீபாரதனையை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாட்டினை சம்பக சஷ்டி விழாகுழு மற்றும் தேவஸ்தானத்தினர் செய்தனர்.