ஜம்புலிப்புத்தூர் கோயில் தெப்பத்தில் கழிவு நீர் கலப்பதால் பாதிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2024 05:12
ஆண்டிபட்டி; ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தில் கழிவு நீர் கலப்பதால் தேங்கும் நீருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுப்பர். இந்த ஆண்டு துவக்கத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜூலை 12ல் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் முன்புறம் உள்ள தெப்பக்குளம் உபயதாரர் மூலம் ரூபாய் பல லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு தெப்பத்திற்கு பாதுகாப்பு வேலியும் உள்ளது. கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறும் நீர் குழாய் மூலம் தெப்பத்தில் தேக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் பெய்த மழையில் தற்போது தெப்பத்தில் பாதி அளவுக்கு மேல் மழை நீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழை நீருடன் ஜம்புலிப்புத்தூர் தெருக்களில் இருந்து வரும் கழிவு நீரும் தெப்பத்தில் சேரும்படி மண்வாய்க்கால் அமைத்துள்ளனர். இதனால் கழிவு நீரும் மழை நீருடன் தெப்பத்தில் சேர்ந்து தண்ணீரின் தன்மை மாறி உள்ளது. தெப்பத்து நீரில் மிதக்கும் குப்பையும் அகற்றப்படவில்லை. தெப்பக்குளத்தில் தேங்கும் நீரை புனித நீராக பக்தர்கள் தலையில் தெளித்து வந்தனர். தற்போது கழிவுநீர் கலந்துள்ளதால் அதில் வளரும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெப்பத்தில் சேரும் கழிவுநீரை தடுக்க ஹிந்து அறநிலையத்துறை, ரெங்கசமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.