நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் புகழ்பெற்ற மலையாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மலையில் சித்தர்கள் ஜீவசமாதி உள்ளது. இதனால் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் தினமும் வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.
இந்த கோவிலுக்கு செல்லும் மலை பாதைக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்சாலையில் தற்போது அதிகளவு ஜல்லிகள் பெயர்ந்துள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும் பக்தர்கள் வாகனம் பஞ்சராகி விடுகிறது. நடந்து செல்லும்போது, ஜல்லிகள் குத்தி அவதியடைந்து வருகின்றனர். கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் கரிநாள் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். இந்த ஆண்டு திருவிழாவிற்கு 50 நாட்களே உள்ளது. இதனால் திருவிழாவிற்கு முன் இந்த சாலையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை சீர் செய்ய கடந்த ஆண்டு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் சாலை பணியை செய்ய ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் தினமும் பக்தர்கள் அவதி தொடர்கிறது. எனவே, அதிகாரிகள் இந்த மலைபாதையை சிமெண்ட் சாலையாக அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.