பதிவு செய்த நாள்
11
டிச
2024
10:12
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அடுத்துள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடக்கவுள்ளது.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா கடந்த, 6ம் தேதி வேதபாராயணத்துடன் துவங்கியது. கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், விழாவை சிறப்பிக்கும் வகையில், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழாவின் பகுதியாக, திருப்பணிகள் நடைபெறுவதுடன், யாக சாலையில் ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட ராஜகோபுரத்துக்கான நான்கு அடியில் ஏழு கலசங்கள்; கருவறை விமானத்துக்கு மூன்று கலசங்கள்; திசை கோபுரங்களுக்கு மூன்று அடியில், 10 கலசங்கள்; பரிவார மூரத்திகளுக்கு ஒரு அடியில், 32 கலசங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தயார்நிலையில் உள்ளன.
இன்று, நான்கு மற்றம் ஐந்தாம் கால யாக பூஜை நடத்தப்படுகிறது. நாளை, காலை, 7:35 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜையைத் தொடர்ந்து, 8:45 மணிக்கு, மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு நடைபெறும். அதன்பின், 9:15 மணிக்கு, மாசாணியம்மன் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு மாசாணியம்மன் மூலாலய கும்பாபிேஷகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், மாலை, 6:30 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
டி.ஐ.ஜி., அறிவுறுத்தல்; கும்பாபிஷேகத்தையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிலில் கோவை டி.ஐ.ஜி., சரவணசுந்தர் ஆய்வு செய்தார். நிருபர்களிடம் கூறியதாவது: கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணிக்காக, ஆயிரம் போலீசார், ஊர்க்காவலர் படையினர் 500 பேர் ஈடுபடுத்தப்படுவர். தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். விழாவுக்கு, 3 லட்சம் பக்தர்கள் வருகை புரிவர் என்பதால், பாதுகாப்பு, கண்காணிப்பு அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, வரிசை முறை அமைத்து, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி., தலைமையிலான போலீசார், பக்தர்கள் கூட்டம் குறையும் வரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு, கூறினார்.