பதிவு செய்த நாள்
15
டிச
2024
10:12
தென்காசி; தென்காசி வந்த அச்சன்கோவில் ஐயப்பன் திருஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன், கேரள மாநிலம் அச்சன்கோயிலில் அரசராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு ஆண்டு தோறும் சபரிமலை சீசனில் 10 நாட்கள் மகோற்சவ திருவிழா நடப்பது வழக்கம். அச்சன்கோவில் உற்சவ விழா நாளை டிச.,16ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் ஐயப்பன், கருப்பனுக்கு திருஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டி கேரள மாநிலம், புனலூர் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது பலத்த பாதுகாப்புடன் அச்சன்கோவில், ஐயப்பன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. புனலூர், அச்சன்கோயில் கேரள மாநிலத்தின் வனப்பகுதிகளில் அமைந்திருப்பதால், பாதுகாப்பு கருதி தென்காசி மாவட்ட எல்லை வழியாக கொண்டுசென்றனர். இன்று பகலில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் முன்பாக கொண்டுவரப்பட்ட ஆபரணப்பெட்டிக்கு பொதுமக்கள் வரவேற்பளித்தனர். ஆபரணப் பெட்டியில் ஐயப்பனின் தலை, முகம், மார்பு, கைகள், கால்கள், கவசம், வாள் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. வாகனத்தை தொடர்ந்து கேரள போலீசார் பாதுகாப்புக்கு வந்தனர். அச்சன்கோவிலில் டிச., 24ல் தேரோட்டமும் டிச., 25ல் ஆராட்டு விழாவும் நடக்கிறது.