திருத்தணி முருகர் மலைக்கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தம் 50 கிலோ பறிமுதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2024 03:12
திருத்தணி; திருத்தணி முருகர் மலைக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். மலைக்கோவிலில், 10க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி கோவில் நிர்வாகம் ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. இந்த கடைகளை ஏலம் எடுத்தவர்கள் பூஜை பொருட்கள், பஞ்சாமிர்தம் மற்றும் முருகர் படங்கள், கயிறுகள் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக பஞ்சாமிர்தம், கால் கிலோ முதல், ஒன்றரை கிலோ வரை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், இரு நாட்களாக பஞ்சாமிர்தம் வாங்கும் பக்தர்கள், பஞ்சாமிர்தம் கெட்டு போயும், காலாவதியான பஞ்சாமிர்தம் விற்பனை செய்வதாக ஹிந்து சமய அறநிலை துறை ஆணையர் அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் கோவில் மேற்பார்வையாளர்கள் மலைக்கோவிலில் பஞ்சாமிர்தம் விற்கப்படும் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது பஞ்சாமிர்தம் டப்பாவில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை. மேலும் பஞ்சாமிர்தம் கெட்டு போய் இருந்தது. இதையடுத்து, மொத்தம், 50 கிலோ பஞ்சாமிர்தம் டப்பாக்கள் பறிமுதல் செய்து கோவில் ஊழியர்கள் கொண்டு சென்றனர்.