பதிவு செய்த நாள்
18
டிச
2024
10:12
திருப்பூர்:சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், விபூதி நிறைந்த திருவோடு, ஒரு ருத்ராட்சம் மற்றும் திருப்புகழ் மருந்து புத்தகம் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டி வழிபாடு நடைமுறையில் உள்ளது. முருகப்பெருமான், பக்தர்கள் கனவில் தோன்றி உணர்த்தும் பொருட்கள், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. நவ., 12ல் விளக்கு வைத்து வழிபாடு நடந்தது. கடந்த, 9ம் தேதி சிறிய கலசத்துடன் கங்கை தீர்த்தம் வைத்து பூஜை நடந்து வந்தது. இந்நிலையில், உசிலம்பட்டியை சேர்ந்த பக்தர் குடும்பத்தினர் சார்பில், புதிய பொருட்கள் வைக்கப்பட்டன.
சிவன்மலை கோவில் சிவாச்சார்யார்கள் கூறியதாவது: கங்கை தீர்த்தம் வைத்த, 11வது நாளில் பொருள் மாறியுள்ளது. தற்போது, திருவோடு நிறைய விபூதியும், அதன் மீது ருத்ராட்சமும் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நோய் தீர்க்கும் பதிகம் அடங்கிய திருப்புகழ் மருந்து என்ற புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. விபூதியும், ருத்ராட்சமும் நோய் தீர்க்கும் மருந்து என்பதை முருகப்பெருமான் உணர்த்தியிருக்கிறார். ருத்ராட்சம் அணிந்து, விபூதி தரித்து இறைவழிபாட்டில் பங்கேற்க வேண்டும். செவ்வாய் கிழமை திருப்புகழ் பாடினால் தீராத வினை தீரும் என்பர். செவ்வாய்க்கிழமை உத்தரவு பெட்டி பொருள் மாறியுள்ளதால், வீட்டிலும், விபூதி மற்றும் உத்ராட்சம் வைத்து, திருப்புகழ் பாடல்களை பாராயணம் செய்து இறையருள் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.