பதிவு செய்த நாள்
20
டிச
2024
10:12
திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஏழு சப்த கன்னியர் சிற்பங்களும், லிங்க வழிபாடு செய்யும் நாக சிற்பங்களை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டெடுத்துள்ளனர். திருப்பாச்சேத்தியிலிருந்து படமாத்தூர் செல்லும் ரோட்டில் வடக்கு கண்மாய் கரையோரம் அமைந்துள்ள அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்
கோவில் வளாகத்தின் ஸ்தல விருட்சமான நெய்கொட்டும் மரத்தின் அருகில் உள்ள தெய்வ சிற்பங்களை தொல்லியல் ஆர்வலர்கள் அய்யப்பன், சோணைமுத்து ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் சப்தகன்னியர்கள் என்ற இரண்டடி உயரமும் ஐந்தடி அகலமும் உடைய இடது கால் மடக்கியும், வலதுகால் தொங்க விடப்பட்ட நிலையிலும், இடது கை இடதுகால் மேல் வைத்து வலது கரத்தில் மலரினை பிடித்தவாறு அமர்ந்த நிலையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களை கண்டனர். சப்த கன்னியர்களின் சிற்பங்களான இதன் அருகில் நாகபந்தம் என அழைக்கப்படும் ஆண் (நாகம்)மற்றும் பெண்(சாரை) பாம்புகள் இணைந்து ஆடகூடிய சிற்பமும் உள்ளது. சப்த கன்னியர்கள் சிற்பங்கள் குறித்து காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை ஆராய்ச்சி மாணவி வாஹினி கூறுகையில் : சப்த கன்னிகள் கிராம மக்களின் காவல் தெய்வமாக திகழ்கின்றன. சோழர் காலத்தில் சப்த கன்னியர்களுக்கு தனி கோவில்கள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. அதன் பின் சப்தகன்னியர் அனைவரும் ஒரே கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஏழு செங்கற்களை சப்த கன்னியர்களாக நினைத்து வழிபடுவதுண்டு. தீமையை அழிக்கவும்,தர்மத்தை நிலைநாட்டும் அன்னையாகவும்,குலம் தழைக்கவும், விவசாயம் செழிக்கவும் அருள்புரிபவர்கள் சப்த கன்னியர் என நம்பபடுகிறது. குல தெய்வம் தெரியாதவர்கள் சப்த கன்னியர்களை குலதெய்வமாக வழிபடுவதுண்டு. நாகதோஷம் நீங்கவேண்டி நேர்த்திக்கடனாக நாகபந்த சிற்பங்களை வைப்பது வழக்கம். நாகம் நீர் தெய்வமாகவும் நீர்வளம்செழிக்க வும் ஊர் காவல் தெய்வமாகவும் விளங்குகிறது.இச்சிற்பத்தில்ஆண் பாம்பும்(நாகம்) பெண் பாம்பும்(சாரை) பிணைந்து சிவலிங்கம் வழிபாடு செய்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.இதனை குளம்,ஏரி பகுதிகளில் நட்டு வழிபாடு செய்வார்கள்,என்றார்.
சிற்பங்கள் குறித்து சோணைமுத்து கூறியதாவது : திருப்பாச்சேத்தி பகுதியில் மிகபழமையான கோவில்கள் இருந்ததாகவும் காலப்போக்கில் சேதமாகி போய்விட்டன. அவற்றில் தென்பட்ட சிலைகள் இன்று சிலகோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வழிபாடு நடந்து வருகின்றன. அதில் இருந்த சப்த கன்னிகள், நாகபந்தம் சிற்பங்கள் இருக்கலாம்.இப்பகுதிகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்பது திருப்பாச்சேத்தி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது, என்றார்.