பழநி கோயிலில் தரிசன வரிசையை முறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2024 10:12
பழநி; பழநி கோயில் பாரவேல் மண்டபம் அருகே தரிசன வலியை முறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழநி, கோயிலில் தற்போது ஐயப்ப பக்தர்கள் மற்றும் தைப்பூச பாதையாத்திரை பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தி எளிமையாக தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூட்டம் அதிகமாக உள்ள சமயங்களில் கட்டணமில்லா பொது தரிசன வகைகளில் 3 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் பத்து ரூபாய் தரிசன டிக்கெட் வரிசையிலும் இதே நிலை நீடிக்கிறது. பழநி கோயிலில் பாரவேல் மண்டபத்தை கடந்து செல்லும் பொது தரிசன வரிசையில் உள்மண்டபத்திற்கு செல்லும் பகுதியில் இரண்டு வரிசைகள் இணைந்து செல்லும் வகையில் வரிசை உள்ளது. இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம் இரு வரிசைகளையும் இணைக்காமல் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வரை தனித்தனி வரிசையாகவே அனுமதித்தால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.