பதிவு செய்த நாள்
20
டிச
2024
06:12
பழநி; பழநி கோயிலுக்கு சொந்தமான 192.984 கிலோ தங்கத்தை உருக்கி பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்ய ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோயிலில் நடைபெற்றது.
பழநி கோயிலுக்கு சொந்தமான தங்கத்தில் சேதாரங்கள் நீக்கி 192.984 கிலோ எடையுள்ள தங்கத்தை உருக்கி பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்ய ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. 20 பெட்டிகளில் வைக்கப்பட்ட தங்க நகைகள் மதிப்பு ரூ. 136 கோடி ஆகும். 20 பெட்டிகள் பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ., செந்தில்குமார், செயலாளர் சந்திரமோகன், கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் சுகுமார், திருமகள், நகை சரிபார்ப்பு இணை கமிஷனர் மங்கையர்க்கரசி, கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, திண்டுக்கல் இணை கமிஷனர் கார்த்திக், உயர்நீதிமன்ற நீதிபதி மாலா ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது," ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 கோயில்களில் உள்ள பயன்பாடு இல்லாத தங்க நகைகள் பாரத ஸ்டேட் வங்கியில் 442 கிலோ வைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 5 கோடியே 75 லட்சம் வட்டியாக கிடைக்கிறது. மாசாணி அம்மன் கோயிலில் 28 கிலோ தங்கம், திருச்சி குணசீலம் கோயிலில் 12 கிலோ தங்கம் ஆகியவை முதலீடு செய்யப்பட்டு கோயிலின் சொத்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடி வட்டி வருமானம் கிடைக்கிறது.
பழநி கோயிலில் இரண்டாம் கட்டமாக கட்டமாக 192.984 கிலோ தங்கம், மும்பை ஸ்டேட் பேங்க் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு உருக்கி முதலீடு செய்யப்படும். இந்த ஆண்டு ஆயிரம் கிலோ நகைகள் வங்கிகளில் வைப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக பழநி கோயிலில் 2007 ஆம் ஆண்டு 191 கிலோ தங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.ஒரு கோடியே 38 லட்சம் வருமானம் பெறப்படுகிறது. கோயிலில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் முறையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பணிகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படும். 28 கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை சட்டப்படி கோயிலுக்கு யானை வாங்க இயலாது. ஆனால் யானைகளை வளர்த்து வரும் நபர்கள் கோயிலுக்கு யானையை பராமரிப்புத் தொகையுடன் வழங்கினால் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படும். இரண்டாவது ரோப்கார் திட்டம், மலேசியா, ஜப்பான் நாடுகளின் தொழில்நுட்பத்துடன் நவீனமயமாக அமைக்கப்படும். அறங்காவலர் குழு விரைவில் அமைக்கப்படும்." என்றார்.