பதிவு செய்த நாள்
23
டிச
2024
10:12
தஞ்சாவூர்: திருவையாறில், ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178 வது ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் விழா நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சித்தியடைந்த பகுள பஞ்சமி தினத்தில் ஆராதனை விழா ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்கள் நடைபெறும். இந்தியா மற்றும் உலக அளவில் உள்ள சங்கீத வித்வான்களும், இசை கலைஞர்களும் திருவையாறில் நடக்கும் ஆராதனை விழாவில் ஆண்டுதோறும் பங்கேற்பது உண்டு. இந்த ஆண்டு இவ்விழா வரும் ஜன. 14ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆராதனை விழாவை முன்னிட்டு நேற்று காலை (22ம் தேதி) பந்தக்கால் முகூர்த்தம் விழா நடந்தது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சபா அறங்காவலர்கள் சந்திரசேகர , சுரேஷ் ,கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் துவக்கமாக ஜன., 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு மங்கள இசை, துவக்கவிழா நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான, ஆராதனை 18ம் தேதி காலை 5:30 மணி முதல் 8:30 மணி வரை ஊஞ்சவிருத்தி பஜனை நிகழ்ச்சியும், 8:30 மணி முதல் 9:00 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள், பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்து தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர், இரவு 7:30 மணிக்கு தியாகராஜர் உருவச்சிலை ஊர்வலமும் மற்றும் ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.