பதிவு செய்த நாள்
28
டிச
2024
11:12
கலபுரகி; தன் மாமியார் இறக்க வேண்டும் என ரூபாய் நோட்டில் எழுதி, கோவில் உண்டியலில் போட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுரகி அப்சல்புராவின் கத்தரகா கிராமத்தில் பாக்யவந்தி கோவில் அமைந்துள்ளது. இது, வரலாற்று பிரசித்தி பெற்றது. தினமும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இங்கு, மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணுவது வழக்கம். இதன்படி, நேற்று முன்தினம் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியலில், 60.05 லட்சம் ரூபாய் ரொக்கம், 200 கிராம் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. பக்தர்கள் பலரும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும்படி, கடிதங்கள் எழுதி உண்டியலில் போட்டிருந்தனர். இதில், 20 ரூபாய் நோட்டின் மீது, ‘என் மாமியார் விரைவில் இறக்க வேண்டும்’ என, யாரோ ஒருவர் எழுதி போட்டிருந்தார். இதை பார்த்து கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு எழுதி போட்டது ஆணா, பெண்ணா என தெரியவில்லை.