அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2024 07:12
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இந்தாண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
மார்கழி மாதம் முதல்நாள் முதல் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கும்போதே பல்வேறு ஊர்களில் இருந்து திரளாக வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இன்று (டிச.29) கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நடந்த ‘மார்கழி இசை சங்கம’ நிகழ்ச்சியில் செய்யாறு மீனாட்சி நாட்டியாலயா, திருநெல்வேலி கலைமகள் நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம் நடந்தன.
பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதியில் குவிந்த பக்தர்கள் பொங்கல் வைத்தும், அரிவாள் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குழுவாக வந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி, சமைத்து, அன்னதானம் வழங்கினர். சபரிமலை ஐயப்பன், பழநி முருகனுக்கு மாலை அணிந்த பக்தர்கள் அழகர்மலை மீதுள்ள சோலைமலை முருகன், ராக்காயி அம்மனை தரிசித்தனர். நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் சமீபத்தில் துவங்கிய நிலையிலும், பக்தர்கள் அன்னதான மண்டபத்தில் காத்துக் கிடக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக மண்டபம் அருகே கோயில் நிர்வாகம் சார்பில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘தினமும் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு அமர்வில் 100 பேர் வீதம் 45 முதல் 50 நிமிடங்களுக்கு ஒருமுறை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்’’ என்றார்.