பதிவு செய்த நாள்
30
டிச
2024
10:12
ஒரு லட்சத்து எட்டு வடை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று (30ம் தேதி) ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்று அதிகாலை, ஒரு லட்சத்து எட்டு வடைகளை மாலையாக கோர்த்து சுவாமிக்கு சாற்றி வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக, ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்க, 2,500 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. பொருட்களை சுத்தம் செய்து அரைத்து வடை செய்யும் பணி, இரவு, பகல் என 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்றது. நேற்று 29ம் தேதி மதியம் ஒரு லட்சத்து எட்டு வடை தயாரிக்கும் பணி முடிவடைந்து, கயிற்றில் மாலையாக கோர்த்து, அன்று இரவு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. அனுமன்ஜெயந்தியை முன்னிட்டு 492 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளன.