பதிவு செய்த நாள்
30
நவ
2012
11:11
சபரிமலை: சபரிமலையில், அப்பம் பிரசாத விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது; இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில், தற்போது மண்டல உற்சவம் நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இவர்களுக்காக அரவணை மற்றும் அப்பம் போன்ற பிரசாதங்கள் விற்கப்படுகின்றன. உற்சவம் துவங்கிய இரு நாட்களில், சபரிமலையில் பக்தர்களுக்கு விற்கப்பட்ட, அப்பங்கள் கெட்டுப் போயிருந்ததாக, புகார் தெரிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து, இது போன்ற புகார்கள் வரவே, 1.61 லட்சம் அப்பம் பாக்கெட்டுகளை, திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் அழித்தனர்.அதனால், அன்றாடம் தயாரிக்கப்பட்ட அப்பங்கள் மட்டுமே, பக்தர்களுக்கு விற்கப்பட்டன. அத்துடன், ஒரு பக்தருக்கு, இரண்டு அப்பம் பாக்கெட்டுகள் மட்டுமே தர முடியும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இந்தப் பிரச்னையால், அப்பம் கிடைக்காத பக்தர்கள் ஆத்திரமடைந்து, விற்பனை கவுன்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நிலைமை சிக்கலாவதை அறிந்த அதிகாரிகள், அப்பம் விற்பனைக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை, விலக்க முடிவு செய்தனர்.மேலும், 60க்கும் மேற்பட்ட, தொழிலாளிகளை புதிதாக நியமித்து, தினமும் அதிகளவில், அப்பங்கள் தயாரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், சபரிமலை பக்தர்கள், தாங்கள் விரும்பும் அளவுக்கு, அப்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.