பதிவு செய்த நாள்
04
ஜன
2025
10:01
சென்னை; நாகப்பட்டினம் சவுந்தரராஜ பெருமாள் கோவில் மூலவர் விமானத்திற்கு செப்பு தகடு வேய்ந்து, தங்க ரேக்குகளை பொருத்தும் பணிகளுக்கு, உபயதாரர்கள் எட்டரை கிலோ தங்கக் கட்டிகளை, சென்னை அறநிலையத்துறை தலைமையகத்தில் அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினர். தங்க கட்டிகள் கோவில் நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், சேகர்பாபு அளித்த பேட்டி: தமிழகம் முழுதும் பல கோவில்களில், 5,487 கோடி ரூபாயில், 21,908 திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதில், உபயதாரர்கள், 1,185 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 9,491 பணிகளை மேற்கொண்டுள்ளனர். கோவில்களுக்கு வர வேண்டிய வாடகை, குத்தகை நிலுவை தொகை, 937 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், பெருந்திட்ட வரைவின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும். இதுவரை, 14 கோவில்களின், 473 கிலோ சுத்த தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. எட்டு கோவில்களுக்கு சொந்தமான, 776 கிலோ பொன் இனங்கள் மத்திய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், 1,000 கிலோ சுத்த தங்க கட்டிகளை வைப்பு நிதியாக முதலீடு செய்வோம். நாகப்பட்டினம் சவுந்தரராஜ பெருமாள் கோவில், 19வது திவ்ய தேசம். இக்கோவிலில், 1.09 கோடி ரூபாயில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிப்.,2ல் சம்ப்ரோக்ஷணம் நடத்தப்படும். இக்கோவில் மூலவர் விமானத்தை தங்க விமானமாக அமைத்திடும் வகையில், தங்க ரேக் ஒட்டும் பணிகளுக்கு, உபயதாரர் மருதப்ப செட்டியார் சார்பில், அவரது பேரன்கள் ஹரி, குகன் ஆகியோர், 6.32 கோடி ரூபாய் மதிப்புள்ள, எட்டரை கிலோ தங்கக் கட்டிகளை வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.