பதிவு செய்த நாள்
06
ஜன
2025
11:01
லக்னோ; உத்தர பிரதேசத்தில் நடக்க உள்ள மஹா கும்பமேளாவின் போது, முஸ்லிம்களை அதிகளவில் மதமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, மூத்த முஸ்லிம் மதத் தலைவர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கிடையே, கும்பமேளாவில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு தடை விதிக்கக் கூடாது என, வேறு சிலர் தெரிவித்துள்ளனர்.
அனுமதி; உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பிரயாக்ராஜில், வரும் 13 முதல் பிப்., 26ம் தேதி வரை, 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நடக்க உள்ளது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 45 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏ.பி.ஏ.பி., எனப்படும் அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற ஹிந்து அமைப்பு, கடந்தாண்டு ஒரு கோரிக்கையை முன்வைத்தது. ‘மஹா கும்பமேளாவில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. சனாதன தர்மத்தை கடைப்பிடிக்கும் ஹிந்துக்கள் மட்டுமே கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும்’ என, அந்த அமைப்பு கோரியிருந்தது. அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் ராஸ்வி பரேல்வி என்ற மூத்த முஸ்லிம் மதத் தலைவர், மஹா கும்பமேளாவுக்கு முஸ்லிம்கள் யாரும் செல்லக் கூடாது என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு முஸ்லிம்கள் இடையே எதிர்ப்பு எழுந்தது. அதே நேரத்தில், முஸ்லிம்கள் கடை வைப்பதற்கு தடை விதிக்கும் முயற்சி சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என, அவர் கூறியிருந்தார். இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, பரேல்வி கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ‘மஹா கும்பமேளாவின்போது, பெருமளவு முஸ்லிம்களை ஹிந்துக்களாக மதம் மாற்றும் முயற்சி நடக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என, அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்துக்கு, வேறு சில முஸ்லிம் மதத் தலைவர்கள், மத அமைப்பின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சகோதரத்துவம்; அதே நேரத்தில் முஸ்லிம்கள் கடை வைப்பதற்கு தடை விதிக்கும் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஜமாயத் உலேமா ஹிந்த் அமைப்பின் உத்தர பிரதேச பிரிவின் சட்ட ஆலோசகர் மவுலானா காப் ரஷீதி கூறுகையில், ‘‘உலகின் மிகப் பெரிய மதச்சார்ப்பற்ற நாடாக உள்ள நம் நாட்டில், ஒரு பிரிவினர் கும்பமேளாவில் பங்கேற்க தடை விதிப்பது முறையானது அல்ல. ‘‘மஹா கும்பமேளாவை, மதத்தின் அடிப்படையில் பார்க்கக் கூடாது. முஸ்லிம்களும் நம் நாட்டைச் சேர்ந்தவர்களே,’’ என, குறிப்பிட்டார். அகில இந்திய ஷியா முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலர் மவுலானா யாகூப் அப்பாஸ் கூறுகையில், ‘‘தங்களுடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு கும்பமேளாவுக்கு முஸ்லிம்கள் செல்வதில் என்ன தவறு இருக்கிறது. ‘‘கும்பமேளாவுக்கு செல்வதாலேயே, ஒரு முஸ்லிம் மதம் மாறிவிடுவார் என்று கூறும் அளவுக்கு இஸ்லாம் பலவீனமாக இல்லை,’’ என, குறிப்பிட்டார். உத்தர பிரதேச ஹஜ் கமிட்டி தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான மோஷின் ராஜா கூறியுள்ளதாவது: நான் பலமுறை கும்பமேளாவுக்குச் சென்றுள்ளேன். அதுபோல பல முஸ்லிம்களும் சென்றுள்ளனர். கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். அதனால், கும்பமேளாவில் முஸ்லிம்கள் கடை வைப்பதற்கோ, செல்வதற்கோ தடை விதிப்பது சனாதனமாகாது. நம் கலாசாரம், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போதிக்கிறது. கும்பமேளாவுக்குச் சென்றால், முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்துவிடுவர் என்று கூறுவது சரியல்ல.
அச்சம்; இவ்வாறு முதல்வருக்கு கடிதம் எழுதியவர்தான், சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு சட்டவிரோதமாக மதம் மாறியவர்கள், மீண்டும் ஹிந்து மதத்துக்கு சென்றுவிடுவர் என்ற அச்சத்தில் கடிதம் எழுதியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, அகில பாரதிய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த தலைவரும், இந்திய இஸ்லாமிய மையத்தின் தலைவருமான மவுலானா கலீத் ரஷீத் பாரங்கி மஹ்லி, ‘‘மஹா கும்பமேளாவுக்கு முஸ்லிம்கள் போகக் கூடாது என்று எந்த உத்தரவையும் பிறப்பிக்க மாட்டோம்’’ என்று கூறியுள்ளார்.