பதிவு செய்த நாள்
07
ஜன
2025
12:01
தனி வரலாறு கொண்டுள்ள, வைத்ய நாதேஸ்வரர் கோவில் பக்தர்களை இழுக்கிறது. இங்குள்ள புற்று மண், நோய்களை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. கர்நாடகாவில் வரலாற்று பிரசித்தி பெற்ற பல கோவில்கள் உள்ளன. இவற்றில் வைத்ய நாதேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். மாண்டியா, மத்துாரின் வைத்யநாதபுராவில், சிம்ஷா ஆற்றங்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. இது புராண பிரசித்தி பெற்றது. பல சிறப்புகளை தன்னுள்ளே அடக்கியுள்ளது. இக்கோவில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
வைத்யநாதபுரா அருகில் உள்ள நகரகெரேவில் ஆட்சி நடத்திய கங்க அரசர், கோசாலை நிர்வகித்து வந்தார். இங்கிருந்த அனைத்து பசுக்களும் பால் கொடுத்தன. ஆனால் ஒரு பசு மட்டும் பால் தரவில்லை. இது அரசருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே ஒருநாள் பசுவை பின் தொடர்ந்து சென்ற போது, அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஆற்றங்கரையில் இருந்த புற்றில் பசு பால் சுரந்தது. இதை கண்ட அரசர், புற்றை இடித்த போது, அதற்குள் இருந்த சிவலிங்கம் மீது ஆயுதம் பட்டு, ரத்தம் வடிய துவங்கியது. அப்போது அசரிரீ குரல், ‘அங்குள்ள செடியில் இருந்து தழைகளை கசக்கி, காயம் அடைந்த இடத்தில் பூசு’ என கூறியது. அரசரும் அவ்வாறே செய்தார். சிவலிங்கத்தின் மீது வழிந்த ரத்தம் நின்றது. இந்த சம்பவத்தால் பக்தி பரவசமடைந்த அரசர், அந்த இடத்தில் கோவில் கட்டினார். தனக்கு தானே வைத்தியம் செய்து கொண்டதால், இந்த கோவிலுக்கு வைத்ய நாதேஸ்வரா என, பெயர் ஏற்பட்டது.கிராமத்துக்கும் வைத்யநாதபுரா என, பெயர் வந்தது.
கோவில் உள்ள புற்று மண், மிகவும் மகத்துவம் வாய்ந்தது. மருத்துவமனைகள், டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமடையாத சரும நோய்களை குணமாக்கும், அற்புத திறன் புற்று மண்ணுக்கு உள்ளது. இதே காரணத்தால், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வைத்ய நாதேஸ்வரர் கோவிலுக்கு வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து, பக்தியுடன் வணங்கினால் எந்த நோயாக இருந்தாலும் குணமடைவதாக ஐதீகம். வைத்ய நாதேஸ்வரரை தரிசித்த மூன்று முதல் ஐந்து வாரங்களில் நோய்கள் குணமடைந்த உதாரணங்கள் ஏராளம். ஆண்டுதோறும் கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில், கோவிலில் சிறப்பு பூஜைகள், கைங்கர்யங்கள் நடக்கின்றன. பக்தர்கள் சிம்ஷா ஆற்றில் புனித நீராடி, வைத்ய நாதேஸ்வரரை தரிசனம் செய்து, தங்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும்படி, வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஹொய்சாளர் பாணியில் கோவில் கட்டப்பட்டுள்ளது. நட்சத்திர வடிவில் இருப்பது தெரிகிறது. வைத்ய நாதேஸ்வரா, அர்க்கேஸ்வரா, பாதாளேஸ்வரா, மருகேஸ்வரா, மல்லிகார்ஜுனா என்ற பஞ்ச லிங்கங்கள் உள்ளன. வைத்ய நாதேஸ்வரரின் துணைவியான பிரசன்ன பார்வதாம்பாவும், இங்கு குடி கொண்டுள்ளார். மிகவும் அபூர்வமான சண்டிகேஸ்வரா, சூர்ய நாராயணா விக்ரகங்களை காணலாம். கோவில் வளாகத்தில் வில்வ மரமும் இருப்பது சிறப்புக்குரியதாகும்.
எப்படி செல்வது?; பெங்களூரில் இருந்து, 80 கி.மீ., தொலைவிலும், மைசூரில் இருந்து 65 கி.மீ., துாரத்திலும் மத்துார் உள்ளது. அரசு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகன வசதியும் ஏராளம். மத்துாரில் இருந்து 4 கி.மீ., பயணித்தால் வைத்ய நாதேஸ்வரா கோவில் வரும்.காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். கோவில், சிறப்பு பூஜைகள், தல வரலாறு உட்பட மற்ற தகவல் வேண்டுவோர், கோவில் அர்ச்சகர் சண்முக சுந்தர தீட்சதரை, 99451 00054 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். – நமது நிருபர் –