பதிவு செய்த நாள்
13
ஜன
2025
08:01
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த கொண்டாபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த தலத்திற்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோவில் மலையடிவாரத்தில் பிரம்ம தீர்த்தம் எனப்படும், தக்கான் குளம் உள்ளது. இந்த குளக்கரையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென, 16 அடி உயரத்தில் பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. சிலையின் கீழ் உள்ள பீடம், 5 அடி அகலம், 3 அடி உயரத்திலான கிரானைட் கல்லால் ஆனது. இந்த பீடத்தில் பெருமாள் சிலை கச்சிதமாக பொருந்தும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தது. இவை யாவும் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து அதிகாலைக்குள் நிறுவப்பட்டு இருந்தது. திடீரென பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பெருமாள் சிலையை, நேற்று அதிகாலை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இந்த செய்தி சோளிங்கர் சுற்றுவட்டார பகுதியில் பரவியது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்ய குவிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, ஹிந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் ஜெயா, சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி, இன்ஸ்பெக்டர் பாரதி உள்ளிட்டோர், இதுகுறித்து விசாரணை நடத்தினர். நிலைமையை அறிந்து நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்ற அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். சிலையை அகற்றக்கூடாது என, சோளிங்கர் நகர பா.ஜ., தலைவர் சேகர் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து அகற்றி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இணைந்து, கிரேன் வாயிலாக, பெருமாள் சிலையை பீடத்தில் இருந்து அகற்றினர். அகற்றப்பட்ட சிலையை ரோப்கார் வளாகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், அடையாளம் தெரியாத நபர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் சிலை, நேற்று மாலையே அங்கிருந்து அகற்றப்பட்டது.