பதிவு செய்த நாள்
16
ஜன
2025
12:01
திருத்தணி; திருத்தணி ஒன்றியம், அகூர் பகுதியில் தீப்பாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நுாறு ஆண்டுகளுக்கு மேலாக, மாட்டுப் பொங்கல் அன்று, அகூர், பாண்டரவேடு, நெமிலி, பெருமாநல்லுார், சொராக்காய்பேட்டை, திருத்தணி உட்பட 10 கிராமத்தினர் தங்களது குடும்பத்துடன் பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று, மாட்டுப்பொங்கலையொட்டி, 500க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியில், மூலவர் அம்மனுக்கு ஆறு கால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, 10 கிராமத்தினர் குடும்பத்துடன் கோவில் வளாகத்தில் உறவினர், நண்பர்கள் ஒன்றாக சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் சாப்பிட்டனர். சிறுவர், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை, 10 கிராம மக்கள் செய்திருந்தனர்.