பதிவு செய்த நாள்
03
டிச
2012
11:12
ஆத்தூர்: ஆத்தூர், தலைவாசல் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆத்தூர் அருகே, தென்பொன்பரப்பி கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நவகிரக சிலைகளில், ராகு, கேது சிலைகள் பிரத்யேமாக அமையப் பெற்றுள்ளது. நேற்று காலை, 8 மணி முதல், 10.53 மணிக்குள், கேது, ரிஷப ராசியில் இருந்து, மேஷ ராசிக்கும், ராகு, விருச்சிகம் ராசியில் இருந்து, துலாம் ராசிக்கும் இடம் பெயர்ந்தனர். அதையொட்டி, ராகு, கேது ஸ்வாமி சிலைகளுக்கு, பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பூஜைகள் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அப்போது, ராகு, கேது, சொர்ணபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
* அதேபோல், தலைவாசல் அருகே, வீரகனூர் சுவேத நதிக் கரையில், கங்கா சவுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ராகு, கேது பெயர்ச்சி மற்றும் நாக தோஷ பரிகார பூஜைகள் நடந்தது.
* அதேபோல், ஆத்தூர் சம்போடை வனத்தில் உள்ள, மதுரகாளியம்மன் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தது. அதையொட்டி, மதுரகாளியம்மன் ஸ்வாமி, விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆத்தூர், நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர்.