பதிவு செய்த நாள்
03
டிச
2012
11:12
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த குண்டம் தேர்த்திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், குண்டம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இதில், மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்தாண்டு சின்னமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, நவம்பர், 20ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 22ம் தேதி கம்பம் நடுதலும், பூவோடு வைத்தலும் நடந்தது. தினமும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், சின்ன மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு, புனித நீர் ஊற்றி வழிபட்டு வந்தனர். கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக, குண்டம் விழாவை, பக்தர்கள் பார்த்திடவும், வரிசையில் நின்று பக்தர்கள் குண்டம் இறங்கவும், ஏதுவாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு, 8 மணிக்கு குண்டம் பற்ற வைத்தல் நடந்தது. நேற்று காலை, 8.30க்கு, சின்னமாரியம்மன் கோவில் தலைமை பூசாரிகளான, ஞானசக்திவேல், சிதம்பரம் ஆகியோர் குண்டம் இறங்கினர். 500 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட விறகுகள் எரியவிட்டு, குண்டம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனின் அருள் பெற்றனர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம், 12 மணிக்கு, குயிலான் தோப்பு துளுவவேளாளர் மண்டபத்தில், அன்னதானம் நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் வில்வமூர்த்தி உத்தரவுப்படி, சின்னமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் அருள்குமார், ஏற்பாடுகளை செய்திருந்தார்.