பதிவு செய்த நாள்
25
ஜன
2025
10:01
சாம்ராஜ்நகர்; பிரசித்தி பெற்ற மலை மஹாதேஸ்வரா மலை கோவில் உண்டியலில், ஒரே மாதத்தில் 2.5 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது. சாம்ராஜ்நகர், ஹனுாரில் உள்ள மலை மஹாதேஸ்வரா கோவில், வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில். கர்நாடகாவின் பணக்கார கோவில்களில் ஒன்றாகும். மஹாதேஸ்வராவை தரிசிக்க கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு, கோவிலின் வருவாயும் அதிகரிக்கிறது. ஒரு மாதத்துக்கு முன், கோவில் உண்டியல் எண்ணப்பட்டபோது, இரண்டு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட காணிக்கை வசூலாகியிருந்தது. நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. மலை மஹாதேஸ்வரா மலையின் பஸ் நிலையம் அருகில் உள்ள வர்த்தக வளாகத்தில், போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராவின் பாதுகாப்புடன் உண்டியல் எண்ணப்பட்டது. வெறும் 30 நாட்களில், 2.29 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது. 18 கிராம் எடையுள்ள தங்கம், 1.200 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தன. 4.21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரென்சி நோட்டுகளும், காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. புத்தாண்டு, பொங்கல் என, தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால், மலை மஹாதேஸ்வரா கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது. இதனால் வருவாயும் அதிகரித்தது.