பதிவு செய்த நாள்
03
பிப்
2025
11:02
உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன., 13ல் துவங்கியது. வரும் 26 வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இதுவரை, 30 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர். உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் மஹா கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று வசந்த பஞ்சமியை முன்னிட்டு பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலை சனாதன கலாச்சாரத்தின் அடையாளங்களான ஸ்ரீ பஞ்சதஷ்ணம் ஜூனா அகாரா, ஸ்ரீ பஞ்சதஷ்ணம் ஆவஹான் அகாரா மற்றும் ஸ்ரீ பஞ்ச அக்னி அகாராவின் துறவிகள், உலக நலனுக்காக அமிர்த ஸ்நானம் செய்தனர். 2025 மகா கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, பிரயாக்ராஜை இணைக்கும் பல்வேறு வழித்தடங்களில் பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீராடும் தளங்களிலிருந்து 2 கி.மீ தொலைவில் வாகன நிறுத்துமிடங்கள் செய்யப்பட்டுள்ளன. 10 எல்லை மாவட்டங்களிலிருந்து வரும் வழித்தடங்களில் 102 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.