பதிவு செய்த நாள்
07
பிப்
2025
11:02
வடபழனி முருகன் கோவில் பிரதான சாலை, மாடவீதிகளின் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தை கிருத்திகை தினமான நேற்றும், பக்தர்கள் தவித்தனர். அடுத்த வாரம் தைப்பூசம் நடக்கவுள்ளதால், பக்தர்கள் சிரமத்தை தவிர்க்க, சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் ஒருங்கிணைந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்றது, நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி முருகன் கோவில். தினமும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். செவ்வாய், வார விடுமுறை, விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசித்து செல்வர்.
ஆற்காடு சாலையில் இருந்து கோவில் முகப்பு நுழைவாயிலுக்கு செல்லும் பிரதான சாலையாக, ஆண்டவர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமும் நடைபாதை மற்றும் சாலையை முழுமையாக ஆக்கிரமித்து, ஏராளமான கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள், சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், கோவில் நுழைவாயிலுக்கு, பக்தர்கள் விபத்து அபாயத்துடனும், நடக்கவும் சிரமப்படுகின்றனர். தை கிருத்திகை நாளான நேற்றும், ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மாடவீதிகளிலும் நடைபாதை கடைகள், வாகனங்களின் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் நடந்து செல்லவே சிரமப்பட்டனர். மனக்குறையை போக்க வரும் பக்தர்கள் கோவிலுக்கு நுழைந்து, வெளியே செல்வதற்குள் ஆக்கிரமிப்புக்களால் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்து, மனச்சுமையுடன் திரும்புகின்றனர். தைப்பூசம், வரும் 11ம் தேதி வரவுள்ள நிலையில், முருகன் கோவிலுக்கு கட்டுக்கடங்காத அளவிற்கு பக்தர்கள் வருவர். அதை மனதில் வைத்து, சென்னை மாநகராட்சி, போக்குவரத்து போலீசார், காவல்துறை ஒருங்கிணைந்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதோடு, பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்களை தீர்க்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். –- நமது நிருபர் -–