பதிவு செய்த நாள்
07
பிப்
2025
03:02
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் தொடர்ந்து 43வது ஆண்டாக தைப்பூச திருவிழாவிற்காக பாதயாத்திரையாக சென்றனர்.
மானாமதுரை அருகே வெள்ளி குறிச்சி கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானையுடன் முருகன் கோயிலில் மாதந்தோறும் வரும் கார்த்திகை நாட்களிலும், பங்குனி உத்திரம் தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற நாட்களில் சுவாமிகளுக்கு பால் பன்னீர் சந்தனம்,குங்குமம்,இளநீர்,நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனைகள் நடைபெறும். வருகிற 11ம் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இக்கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.நேற்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்குறிச்சியில் இருந்து பாதயாத்திரை குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்ட பின்னர் பாதயாத்திரையாக திருப்பாச்சேத்தி, திருப்புவனம்,மதுரை,திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்கு சென்றனர். வெள்ளி குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிஸ்கட் குளிர்பானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொடுத்து வழி அனுப்பினர்.