பதிவு செய்த நாள்
10
பிப்
2025
10:02
தொண்டாமுத்தூர்; கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது.
கோவையில் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலாகவும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின், இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக, கடந்த, 2023ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், விமான கோபுரம் ராஜகோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 4ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கடந்த, 7ம் தேதி, யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை, 5:45 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜையும், 108 மூலிகை பொருட்கள் ஆகுதி நடந்தது. இதனைத்தொடர்ந்து, காலை, 9:05 மணிக்கு, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஸர்வ ஸாதகம் செந்தில் ராஜ குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள், யாகசாலையில் இருந்து, ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கு, புனித நீர் கலசங்கள் கொண்டு வந்தனர். சரியாக, காலை, 9:50 மணிக்கு, கொடி அசைக்க, பட்டீஸ்வரர் மூலஸ்தான கோபுரத்திற்கு, புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, ராஜகோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, யாகசாலையிலிருந்து, கும்ப கலசங்கள் புறப்பட்டபோது, வானில், கருடன் கோவிலை சுற்றி வட்டமடித்தவாறு சுற்றி வந்தது. இதனைக்கண்ட பக்தர்கள், பேரூரா., பட்டீசா., என பக்தர்கள் கோஷமிட்டு, வழிபட்டனர். கும்பாபிஷேகத்தை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்ததால், பேரூரில் உள்ள வீதிகள் மற்றும் கட்டடங்களின் மாடி முழுவதும், மக்களின் தலைகள் மட்டுமே தென்பட்டது. கும்பாபிஷேகத்திற்காக, சிறுவாணி மெயின் ரோடு, பேரூர் பகுதியில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேக விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, கலெக்டர் கிராந்தி குமார், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.