பதிவு செய்த நாள்
10
பிப்
2025
10:02
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா பக்தர்களின் சக்தி கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது.
பரமக்குடியில் காவல் தெய்வமாக விளங்கும் முத்தால பரமேஸ்வரி அம்பாளுக்கு கும்பாபிஷேக விழா பிப். 4ல் துவங்கியது. பிப். 7 அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்தங்கள் எடுக்கப்பட்டு, நகர் வலம் வந்து யாகசாலையை அடைந்தனர். அன்று இரவு முதல் கால யாக பூஜை, பிப். 8, 9 ம் நாளில் ஐந்து கால யாக பூஜைகள் பூர்ணாகுதி நடத்தப்பட்டது. இன்று காலை 4:30 மணிக்கு 6ம் காலயாக பூஜைகள் துவங்கி, 7:15 மணிக்கு மகா பூர்ணாகுதி நடந்தது. பின்னர் அனைத்து பரிவாரங்கள் மற்றும் பிரதான கும்பங்கள் புறப்பாடாகி, கோயிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் விமான கலசத்தை அடைந்தனர். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, கருடன் வானில் வட்டமிட, காலை 9:10 மணிக்கு பிரதான விமானம் மற்றும் ராஜ கோபுரத்திற்கு மகா கும்ப அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தீபாராதனைகள் நிறைவடைந்து, மூலவர் அம்மன் மற்றும் அனைத்து பரிவார தேவதைகளுக்கும் கும்பநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் சக்தி கோஷம் முழங்க வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் தேவஸ்தான பரம்பரை டிரஷ்டிகள் ஜெயராமன், ரவீந்திரன், அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியன், ஆயிர வைசிய சபை தலைவர் போஸ், இணைத்தலைவர் பாலுச்சாமி உள்ளிட்ட சபை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.