பதிவு செய்த நாள்
10
பிப்
2025
11:02
தஞ்சாவூர், – தஞ்சாவூரில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள புன்னை மரக்காட்டில் புற்று உருவாய் தோன்றியது அம்மன். மூலஸ்தான அம்மன் புற்று மண்ணால் உருவானதால், மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தைல காப்பு அபிஷேகம் மட்டுமே நடைபெறும். இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேஸ்தானத்தின் கீழ் உள்ள 88 கோவில்களில் ஒன்றாகும்.
கடந்த 2004ம் ஆண்டு கடைசியாக பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லேவால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு, அரண்மனை தேஸ்வதானம், அறநிலையத்துறை சார்பில், கோவில் திருப்பணிகள் துவங்கியது. இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும், 4ம் தேதி நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், தொடர்ந்து, 5ம் தேதி மகாலட்சுமி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், 6ம் தேதி சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதியும் நடைபெற்றது.
7ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டு, மாலை திருக்குடங்கள் யாகசாலை எழுந்தருளுதல் செய்யப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து 8ம் தேதி காலை 2ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மாலை 3ம் கால யாகசாலை பூஜைகள், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடைபெற உள்ளது. தொடர்ந்து நேற்று 9ம் தேதி காலை 4ம் கால யாகசாலையும், மாலை 5ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி முடிவடைந்து, தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று(10 ம் தேதி) காலை 9:10 மணிக்கு மாரியம்மன் மற்றும் பரிவார கலசங்கள் புறப்பாடு நடந்தது. பிறகு, 9:45 மணிக்கு விநாயகர், சுப்ரமணியர்,மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு புனித நீர் உற்றப்பட்டு சமகால மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு மூலாலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் உற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனால், தஞ்சாவூர் விழாக்கோலம் பூண்டு இருந்தது.