பதிவு செய்த நாள்
11
பிப்
2025
04:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி, தெய்வானை புறப்பாடாகினர். மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவர் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து காலையில் பூஜை முடிந்து சிவாச்சாரியார்கள் பூஜை பொருட்களுடன் உப கோயிலான மலை அடிவாரத்திலுள்ள பழனி ஆண்டவர் கோயிலுக்கு சென்றனர். அங்கு யாக பூஜை முடிந்து மூலவர் பழனி ஆண்டவருக்கு 100 லிட்டர் பால், சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்பட பதினாறு வகை அபிஷேகங்கள் முடிந்து ராஜ அலங்காரமானது. தீபாராதனைக்கு பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
இரண்டு முருகப்பெருமான் புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா காலங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மட்டும் புறப்பாடாகி ரத வீதிகள், கிரிவீதியில் உலா நிகழ்ச்சி நடைபெறும். தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, தெய்வானை தனித்தனியாக ரத வீதிகளில் புறப்பாடகினர். இரண்டு மூலவர்கள் புறப்பாடாவது ஆண்டுக்கு ஒரு முறை தைப்பூசத் தன்று மட்டுமே.
காவடி: திருப்பரங்குன்றம், மதுரை சுற்றியுள்ள பக்தர்கள் பால், பன்னீர், இளநீர் காவடி எடுத்தும், முகத்தில் அழகு குத்தியும், பக்தர்கள் நட்சத்திர காவடி, பறவை காவடியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தைகளுடன் வந்த பெற்றோரில் பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளின் தலையில் கிரீடம் வைத்தும், கையில் வேல் கொடுத்தும் தூக்கி வந்தனர். பலர் குழந்தைகளுக்கு முருகன் வேடம் அணிந்து அழைத்து வந்தனர். இன்று தைப்பூசம் பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இலவச தரிசனத்து செல்லும் பக்தர்களுக்கு ஒரு வரிசையும் கட்டண தரிசனம் பக்தர்களுக்கு தனி வரிசையும் அமைக்கப்பட்டு இருந்தது இலவச தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் கோயில் முதல் மலைக்குப் பின்புறம் புதிய படிக்கட்டு வரை 2 கி.மீ., வரிசையில் நின்று மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கட்டண தரிசன பக்தர்கள் பஸ் ஸ்டாண்டு வரை வரிசையில் வெயிலில் நின்றனர். வழக்கமாக கோயில் நடை மதியம் ஒரு மணிக்கு சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் மதியம் கோயில் நடை சாத்தப்படவில்லை. காலை முதல் இரவு வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
குவிந்த பக்தர்கள்: வழக்கமாக தைப்பூசத்தன்று பக்தர்கள் குன்றத்திற்கு குறைந்த அளவிலேயே வருவர். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஹிந்து முன்னணியினர் அறப்போராட்ட அறிவிப்பு, அதற்கு போலீசார் தடை, மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவும் பிறப்பித்தது, குன்றத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பரிசோதனைக்குப் பின்பே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நீதிமன்றம் அறப்போராட்டத்திற்கு அனுமதி அளித்த பின்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு இன்று தைப்பூசத்திற்கு பக்தர்கள் திருப்பரங்குன்றம் மதுரை மட்டுமின்றி திருச்செங்கோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர்.