பதிவு செய்த நாள்
12
பிப்
2025
04:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோத்சவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சிவராத்திரி விழாவிற்கு முன்பு நடைபெறும் சத்வோமுக்தி விரதம் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு இன்று புனித நதியான சொர்ணமுகியில் சத்வோமுக்தி விரதம் மற்றும் திரிசூல ஸ்நானம் நடைபெற்றது . முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தேவையானை சமேத சுப்பிரமணிய சுவாமி, சோம ஸ்கந்தமூர்த்தி ஞானப்பிரசுனாம்பிகா தேவி, சண்டிகேஸ்வர சுவாமி, உமாதேவி சமேத சந்திரசேகர சுவாமி வீற்றிருக்கும் திரிசூலத்தை கோயில் வேதப் பண்டிதர்கள் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வந்து, சொர்ணமுகி ஆற்று வரை வலம் வந்தனர். அங்கு சிறப்பு ஆரத்திகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தினர் . பின்னர் காளஹஸ்தீஷ்வரருக்கும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தி தீப, தூப, நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்தனர் . தொடர்ந்து சொர்ணமுகி ஆற்றில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளத்தில் திரிசூல ஸ்நானம் நடைபெற்றது. இந்த திரிசூல ஸ்நானத்தில் ஏராளமான பக்தர்கள் (சூலத்துடன்) புண்ணிய நீராடினர்.