வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை திறப்பு; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2025 10:02
கடலுார்; வடலுார் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையை ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து, பரவசமடைந்தனர். கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம் கடந்த 11ம் தேதி நடந்தது. தொடர்ந்து, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் நேற்று திருவறை தரிசனம் நடந்தது. அதையொட்டி வடலுார் சத்திய ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி மற்றும் உருவப்படத்தை பூக்களால் அலங்கரித்து, வள்ளலார் நடந்து வந்த பாதை வழியே மேளதாளம் முழங்க ஊர் வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதனை கருங்குழி கிராமத்தை சேர்ந்த மீனவ சமூகத்தினர தோளில் சுமந்து, ஊர்வலமாக புறப்பட்டனர். வழியில், கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோவில், வள்ளலார் தண்ணீரில் விளக்கு ஏற்றிய ரெட்டியார் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வரவேற்பு அளித்து, வழிபாடு செய்தனர். மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள சித்தி வளாக திருமாளிகை அடைந்தபோது, கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் சித்தி பெற்ற அறைக்குள் தரிசனம் தொடங்கியது. திருஅறை தரிசனம் பகல் 12.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை நடந்தது. ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திருவறை தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர். சித்தி வளாகத்தில் சன்மார்க்க சங்க சொற்பொழிவுகள், அன்னதான நிகழ்ச்சிகளும் நடந்தன.