பதிவு செய்த நாள்
19
பிப்
2025
12:02
திருப்புல்லாணி; மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திருப்புல்லாணி, பெரியபட்டினம், கீழக்கரை, சிக்கல், சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் குலதெய்வ வழிபாட்டிற்காக ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.
மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி அன்று சிவன் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு விசேஷமானதாகும். குலதெய்வ கோயிலுக்கு சென்றோ, குலதெய்வத்தை வீட்டில் இருந்தபடியே குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வழிபடுகின்றனர். முன்னோர்கள் குலதெய்வ வழிபாட்டை செய்வதால் மனம் குளிர்ந்து நம்மையும், குடும்பத்தையும் நம் குலதெய்வம் காத்தருவார்கள் என்பது ஐதீகம். பெரும்பாலும் குலதெய்வம் என்பது கிராம தெய்வங்களாக கிராம தேவதையாகவே அமைந்திருக்கும். குலதெய்வத்தை எந்நாளும் வணங்கலாம். எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம் முக்கியமாக மாசி மாதம் அன்று குலதெய்வத்தை வணங்குவதற்குரிய மாதமாகும். வரக்கூடிய பிப்., 26 புதன்கிழமை அன்று மகா சிவராத்திரி வர உள்ளது. சிவராத்திரியில் இருந்து தொடர்ச்சியாக 10 நாட்களுக்குள் பல்வேறு கோயில்களில் மாசி களரி பாரிவேட்டை உற்ஸவ விழா இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். அச்சமயங்களில் ஆட்டுக்கிடாய் சேவல், கோழி பலியிடுதல், பொங்கலிடுதல், கரகம், காவடி, பால்குடம், அக்னி சட்டி எடுத்தல், முடி காணிக்கை செய்தல், அசைவ அன்னதானம் உள்ளிட்டவைகள் தடபுலராக நடக்கும். குலதெய்வ வழிபாட்டிற்காக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் இரவு பொழுதில் தங்கி இருந்து குலதெய்வம் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்துவிட்டு திரும்புவார்கள். ஆட்டுக் கிடாய்கள் பலியிடுவதற்காக அவற்றை தேர்வு செய்வதற்கும், கிராம மக்கள் வீட்டில் இருந்தே வளர்த்தும் விலைக்கு வாங்கியும் நேர்த்திக்கடன்களை செய்கின்றனர். பெருவாரியான அறுவடை பணிகள் முடிந்து மாசி களரி விழா வருவதால் சுற்றுவட்டார கிராம மக்கள் உற்ஸவத்திற்கு தயாராகி வருகின்றனர்.