பதிவு செய்த நாள்
24
பிப்
2025
12:02
சத்தர்புர்; அடிமை மனநிலை உடைய சில தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் நம் நாட்டின் மத மற்றும் கலாசார மரபுகளை தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மஹா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் காரணமாக நடந்த உயிரிழப்புகள், 300 கி.மீ., துாரம் வரையிலான போக்குவரத்து நெரிசல்களை பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘இது மஹா கும்பமேளா அல்ல; மரண கும்பமேளா’ என, தெரிவித்தார். இந்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி நேற்று பதிலடி தந்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்தர்புரில், ஸ்ரீ பாகேஷ்வர் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஹிந்து நம்பிக்கைகளை வெறுப்பவர்கள் பல நுாற்றாண்டுகளாக பல்வேறு வேடங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அடிமை மனநிலை உடையவர்கள். வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் நம் நம்பிக்கைகள், கோவில்கள், துறவியர், கலாசாரம் மற்றும் மரபுகளை தாக்குகின்றனர். ஹிந்து பண்டிகைகள், நம்பிக்கைகளை இழிவுபடுத்துகின்றனர். நம் நாட்டின் சமூக ஒற்றுமையை உடைப்பதே இந்த கும்பலின் நோக்கம். நம் மதம் மற்றும் கலாசாரம் மீது சேற்றை வாரி வீசுகின்றனர். இது போன்றவர்களை ஆதரித்து, நம் நாட்டையும், ஹிந்து மதத்தையும் பலவீனப்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டு சக்திகள் ஈடுபடுவது பல காலமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
‘விஞ்ஞானியாக மாற வேண்டும்’; பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக உரையாற்றுகிறார். இதன்படி நேற்று ஒலிபரப்பான 119வது அத்தியாயத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:தற்போது விண்வெளி துறையானது, இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த துறையில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தனியார் பங்கேற்பு போன்றவற்றை சில ஆண்டுகளுக்கு முன் நாம் யோசித்து பார்த்ததுகூட கிடையாது.அடுத்த சில நாட்களில் தேசிய அறிவியல் தினத்தை கொண்டாட உள்ளோம். இந்த நேரத்தில், அனைவரும் ஒரு நாள் விஞ்ஞானியாக மாற வேண்டும். ஆய்வுக் கூடம், கோளரங்கம் அல்லது விண்வெளி மையம் போன்றவற்றுக்கு சென்று பாருங்கள். அறிவியல் மீதான ஆர்வத்தை இது அதிகரிக்கச் செய்யும்.இன்று எட்டில் ஒருவர், உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுகிறார் என, ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதில் கவலையளிக்கும் விஷயம், குழந்தைகளிடம் இந்த பிரச்னை அதிகரித்துள்ளது தான்.உடல் பருமன், பல வகையான நோய்களை, பிரச்னைகளை உருவாக்குகிறது. உங்களுடைய உணவில் பயன்படுத்தும் எண்ணெயில், 10 சதவீதத்தை குறையுங்கள். அதுபோல, உணவுக்கான எண்ணெய் வாங்கும்போதே, 10 சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு படிப்படியாக இதை அதிகரித்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எண்ணெயை குறைக்கும் அதே நேரத்தில், 10 பேரிடமும் இது போன்ற சவாலை முன்வையுங்கள். இதனால், உடல் பருமன் பிரச்னையில் இருந்து விடுபட முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.