பதிவு செய்த நாள்
26
பிப்
2025
11:02
நாகர்கோவில்; மகா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 கோவில்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ஓடிச்சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் முஞ்சிறை மகாதேவர் கோயிலில் நேற்று துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் உள்ள திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருந்திக்கரை, பொன்மனை, திருபன்னியோடு, கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு, திருநட்டாலம் ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோவில்களை சிவராத்திரி நாளில் வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இன்று சிவராத்திரியை ஒட்டி கழுத்தில் மாலை அணிந்து காவி உடை அணிந்த பக்தர்கள் கையில் விசிறியும், இடுப்பில் திருநீற்றுப்பையும் சுமந்து கொண்டு கோபாலா கோவிந்தா என்று கோஷமிட்டபடி ஓடும் நிகழ்வு நேற்று மதியம் முஞ்சிறை மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கியது. இன்று(பிப்., 26) மாலை முதல் இந்த ஓட்டம் திருநட்டாலத்தில் நிறைவு பெறுகிறது. வாகனங்களில் செல்பவர்கள் இன்று அதிகாலை முஞ்சிறையில் இருந்து பயணத்தை தொடங்கி நள்ளிரவுக்குள் முடிப்பார்கள். 12 கோவில்களுக்கு செல்லும் பாதைகளில் கோபாலா கோவிந்தா என்ற கோஷம் எதிரொலிக்கிறது. பாதைகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர், -பானகம் வழங்கப்பட்டன.