பதிவு செய்த நாள்
26
பிப்
2025
11:02
திருப்பூர்; சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவில், ஆண்டவர் உத்தரவு பெட்டியில், வைக்கோல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டி வழிபாடு நடைமுறையில் உள்ளது. பக்தர்கள் கனவில் தோன்றி, முருகப்பெருமான் உணர்த்தும் பொருட்கள், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டில் இருக்கும் பொருட்கள் தொடர்பான நிகழ்வுகள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக காலம்காலமாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக, திருவோடு, விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் திருப்புகழ் புத்தகம் ஆகியவை வைத்து பூஜை நடந்தது. தைப்பூச தேர்த்திருவிழா நிறைவடைந்த நிலையில், உத்தரவு பெட்டியில் நேற்று, பொருள் மாறியுள்ளது. சிவாச்சாரியார்கள், ஸ்ரீசுப்பிரமணியரிடம் உத்தரவு பெற்று, ஆண்டவர் உத்தரவு பெட்டியில், ஒரு கட்டு வைக்கோல் வைத்து பூஜை செய்தனர். தகவல் அறிந்து, விவசாயிகள் சிவன்மலை கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் கூறுகையில், ‘‘அறுவடையான நெல்லை வைக்கோலுடன் சேர்த்து, மங்களகரமாக வீட்டில் கட்டுவது வழக்கம். சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கோல் வைத்துள்ளது நன்மை அளிக்கும். அறுவடை முடிந்து, வைக்கோல், சோளத்தட்டு விற்பனை நடந்து வருகிறது. கால்நடைகளுக்கு, ஆண்டு முழுவதும் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. மகசூல் செய்த விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்; கோடையில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, கால்நடை வளர்ப்பவர்களின் வேண்டுதல் நிறைவேறும்,’’ என்றார்.