பதிவு செய்த நாள்
27
பிப்
2025
03:02
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலம் நடந்தது. நேற்று இரண்டாம் நாள் விழாவாக மயானகொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு கோவிலில் இருந்து சிம்ம வாகனத்தில் விஸ்வரூப கோலத்தில் அங்காளம்மன் மயானத்திற்கு புறப்பாட்டார். அம்மனுக்கு முன்னதாக பூசாரிகள் பிரம்ம கபாலத்துடன் ஆடியபடி வந்தனர். நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாணயங்கள், காய்கனிகள், உணவு பொருட்கள், தானியங்கள் வாரி இறைத்தும், சேவல்களை வீசியும் காணிக்கை செலுத்தினர். 10.50 மணிக்கு அங்காளம்மன் மயானத்தில் எழுந்தருளியதும், அங்கு குவித்து வைத்திருந்த காய்கனிகள், பழங்கள், தாணியங்கள், உணவு பொருட்களை படையலிட்டு பூசாரிகளும், பொது மக்களும் கொள்ளை விட்டனர். அப்போது பிரம்ம கபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், அறங்காவலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி.,க்கள் கார்த்திகா பிரியா, ஞானவேல் தலைமையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர்.