வானுார்; ஆரோவில்லில் 57ம் ஆண்டு உதய நாளையொட்டி, ‘போன் பயர்’ ஏற்றி கூட்டு தியானத்தில் ஈடுப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில், அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், கடந்த 1968ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டது. நகரின் 57வது உதய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், உள்ளூர் வாசிகள் மாத்ரி மந்திர் அருகே உள்ள ஆம்பி தியேட்டரில் இன்று அதிகாலை 4:00 மணிக்கு கூடினர். 5:15 மணிக்கு போன் பயர் ஏற்றி, 6:15 மணி வரை கூட்டு தியானத்தில் ஈடுப்பட்டனர். தியானத்தின்போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது. போன் பயர் தீப்பிழம்பின் பின்னணியில் மாத்ரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்து, அனைவரையும் பரவசப்படுத்தியது.