பதிவு செய்த நாள்
28
பிப்
2025
03:02
ரிஷிவந்தியம்; ஆதி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில், கடந்த 5 மாதத்தில் ரூ.33.76 லட்சம் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
வாணாபுரம் அடுத்த ஆதி திருவரங்கத்தில் பழமையான அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த, 11 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கோவில் திருப்பணிக்காக – 2; தற்காலிகமாக – 6; மற்றும் கோமாதா பராமரிப்புக்கு, ஒரு உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு செப்., 25ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டது. இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கள்ளக்குறிச்சி அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மேற்பார்வையில் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டன. செயல் அலுவலர் பாக்கியராஜ் முன்னிலையில், கோவில் ஊழியர்கள் பிரகாஷ், விமல் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 33 லட்சத்து 76 ஆயிரத்து 360 ரூபாய் பணம்; 71 கிராம் தங்கம்; 165 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. தொடர்ந்து காணிக்கை பொருட்கள், வங்கி கணக்கில் செலுத்தப்பட்டன. மணலுார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.