பதிவு செய்த நாள்
04
மார்
2025
10:03
நாகர்கோவில்; ‘‘கட்டுப்பாடு இல்லாத உணவு வகைகள் காம உணர்வுகளை அதிகரிக்கின்றன. மதுவும் போதைப் பொருட்களும் பெண்கள் மீதான வன்முறையை அதிகரிக்கிறது,’’ என, சேவா பாரதி வெள்ளி விழாவையொட்டி நாகர்கோவில் அமிர்தா பல்கலையில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற கர்மயோகினி நிகழ்வில் மாதா அமிர்தானந்தமயி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: குழந்தைகளுக்காக தியாகம் அனுபவிக்கும் தாய்மை உள்ள நாடு பாரதம். ஆண்,- பெண் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான அன்பு செலுத்த தாய்மையால் மட்டுமே முடியும். நாட்டை காக்க, நாட்டுக்காக சேவை செய்ய ஒரு புனர்ஜென்மம் அளிக்க பெண்களால் மட்டுமே முடியும். உலகில் ஈஸ்வரனுக்கு ஒரு உருவம் கொடுக்க வேண்டும் என்றால் ஆணைவிட பெண்தான் பொருத்தமாக இருக்கும். பெண் சக்தி மீண்டும் விழித்தெழ வேண்டும். மாற்றம் ஏற்படுத்த நம்மால் தான் முடியும். நாம் சுடர்விடும் சூரியன்கள். அழுது கொண்டிருக்க வேண்டியது இல்லை. வாழ்க்கைக்கு கல்வி அவசியம். அத்துடன் பண்பாடும் முக்கியம். பாலியல் விவகாரங்களை இன்று கட்டுப்படுத்த முடியவில்லை. போதை ஏறிய குரங்காக மனம் கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டது. குழந்தைகளுக்கு தாய் அறத்தை போதிக்க வேண்டும். ஒரு பொருளை நாம் அடையும் போது மீதமுள்ளது மற்றவர்களுக்கு பயன்படும் என்பதை மறக்கக்கூடாது. இன்று குழந்தைகள் அம்மாவிடம் இல்லை. மாறாக ஆயாக்களிடம் இருக்கின்றனர்.
பணிகளுக்கு மத்தியிலும் பெற்றோர் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அலைபேசியையும் டிவி சீரியலையும் குறைத்து குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். கட்டுப்பாடு இல்லாத உணவு வகைகள் காம உணர்வுகளை அதிகரிக்கிறது. இறைவன் எங்கு நிறைந்திருந்தாலும் கோயில் தரிசனம் தேவை என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். பால் தருவது பசு என்றாலும் அந்த பால் கிடைப்பது அதன் மடியில் இருந்து மட்டுமே என்பதை அறிய வேண்டும். நம் பாரதத்தின் பண்பாட்டால் குடும்பங்கள் சிதையாமல் உள்ளன. பெண்ணும் ஆணும் பரஸ்பரம் ஆள்வதாக நினைப்பது தேவையற்றது. இருவரும் பக்கபலமாக வாழ வேண்டும். அப்போது தான் சமூகம் பலமாகும். மதுவும், போதையும் பெண்கள் மீதான வன்முறைக்கு காரணமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும். வரும் காலம் பெண்களுக்கான வெற்றிக்காலம். இவ்வாறு அவர் பேசினார். ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத பொது செயலாளர் தத்தாத்ரேயா கோசபலே, டி.ஆர்.டி.ஓ., முன்னாள் தலைமை இயக்குனர் டெஸ்ஸி தாமஸ், டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் பேசினர்.