பதிவு செய்த நாள்
04
மார்
2025
10:03
மதுரை; மதுரையை அடுத்த பொய்கைக்கரைப்பட்டியில், ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து, பூமி பூஜை நாளை மறுநாள் வியாழக்கிழமை (மார்ச் 6) நடக்க உள்ளது.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், அதன் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில் கோயில் கட்டப்பட உள்ளது. பொய்கைக்கரைப்பட்டி - அலங்காநல்லூர் சாலையில் உள்ள அழகர்கோவில் தெப்பக்குளம் எதிரே, அரசுப் பள்ளிக்கு அடுத்துள்ள சிட்டி பால்ஸ் வளாகத்தில் இக்கோயில் அமைய இருக்கிறது. மார்ச் 6, காலை 9 மணி முதல் 12.30 மணிக்குள், வேத விற்பன்னர்கள், ஆன்மிக பெரியவர்கள், ஆன்றோர் பெருமக்கள் சூழ கோயிலின் வாஸ்து, பூமி பூஜையோடு கோயில் திருப்பணி தொடங்குகிறது. நிகழ்வில் சிறப்பு ஹோமங்கள், ஆராதனைகள், மஹன்யாசம் உள்ளிட்ட வைப்பவங்கள் நடத்தப்பட இருக்கிறது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணன் தலைமையில், ஆடிட்டர் சேது மாதவா, நந்தினி ரியல் எஸ்டேட் அதிபர் எம்.ஆர்.பிரபு முன்னிலையில், மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி ஸ்ரீ நித்திய தீபாநந்தா குத்துவிளக்கேற்றி திருப்பணியைத் தொடங்கி வைத்து ஆசி வழங்குகிறார். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். பங்கேற்கும் அனைவருக்கும் ஸ்படிக மாலை, விபூதி பிரசாதம், ஸ்ரீமகா பெரியவா புகைப்படம், அழகர்கோவில் பிரசாதம் மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட உள்ளது. திருப்பணிக்கு ஒரு சதுர அடிக்கு ரூபாய் 3,500 வீதம் 2 சதுர அடி, 5 மற்றும் 10 சதுர அடி வீதம் தங்கள் பங்களிப்பை வழங்கலாம். ஒரு லட்சதிற்கு மேல் வழங்கும் பக்தர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட உள்ளது. விவரங்களுக்கு மதுரை அனுஷத்தின் அனுகிரஹம் நிறுவனர் நெல்லை பாலு - 94426 30815 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.